வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கியது. மத்திய , மாநில அரசு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.
18-ம் தேதி இங்கே மக்கள் பரிதவித்து கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டுமா..? அல்லது “மக்களுடன் முதல்வர்” என்று கோயம்புத்தூரில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா..? என தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்த நிலையில் தூத்துக்குடி மக்களின் குரலாய் பேசியதற்கு தனிப்பட்ட முறையில் தன்னை காயப்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
தூத்துக்குடி மக்களின் குரலாய் பேசியதற்கு தனிப்பட்ட முறையில் தன்னை காயப்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிடுகின்றனர். அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள் ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் பார்த்துள்ளேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.