கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டுவந்த அசைவ ஓட்டலை முற்றுகையிட்ட DYFI அமைப்பினர் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதபடுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி . கேரள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ரஷ்மி சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிட்டுள்ளார். இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல்நிலை மோசமானதால் பின்னர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ரஷ்மி உயிரிழந்தார். உடனடியாக சுகாதாரத் துறையினர் ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். இதே ஓட்டலில் சாப்பிட்ட மேலும், 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோட்டயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோட்டயம் சங்கராந்தியில் செயல்பட்டு வரும் உணவகத்தை முற்றுகையிட்ட DYFI அமைப்பினர் ஓட்டலின் பெயர் பலகை மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை அடித்து நொறுக்கினர். ரஷ்மியின் மரணத்திற்கு கோட்டயம் மாநகராட்சியின் தோல்வியே காரணம் என்று DYFI அமைப்பினர் குற்றம் சாட்டினர். இது போன்று சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ள நிலையில் ஓட்டல்கள் மீது அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.