தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது..