ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளது.. ஆனால் அதே நேரத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவும் நிலையில், இடைத்தேர்தலில் யார் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓபிஎஸ் தரப்பிலும் தனித்தனியாக வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
மேலும் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, இந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிட மும்முரம் காட்டி வருகிறது.. எனவே இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. இதனிடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.. இந்த சூழலில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பி படிவ விண்ணப்பத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கையெழுத்திட வேண்டும்.. ஆனால் இருவரும் சேர்ந்து கையெழுத்திட வாய்ப்பில்லை என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.. எனவே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு தனித்தனியே போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படலாம் என்று கூறப்படுகிறது..
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இந்த இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.. மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.. மேலும் ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது.. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோ என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.. மேலும் பாஜக போட்டியிட்டால் விட்டு தருவோம் என்றும் தெரிவித்தார்..
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று சந்தித்தனர்.. தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி தரப்பினர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்தனர்..
மாலை 3.15 மணியளவில் தொடங்கிய 20 நிமிடங்களில் நிறைவடைந்தது.. இந்த கூட்டத்தில், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாகவும், பாஜக அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது…
இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அண்ணாமலையை சந்தித்து பேசி வருகின்றனர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அண்ணாலையை சந்தித்து பேசி வருகிறார்.. எனினும் பாஜக, எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவளிக்குமா அல்லது ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளிக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்பது தெரியவில்லை..