ஈரோட்டில் வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி விஜயநகரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் ராமசாமி (75), பாக்கியலட்சுமி (60) ஆகிய தம்பதியினர் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களின் மகன் ரவிசங்கரும், மகள் பானுமதியும் முத்தூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு ரவிசங்கர், தனது பெற்றோரை செல்போனில் அழைத்துள்ளார்.
பலமுறை தொடர்பு கொண்டும் அவர்கள் செல்போனை எடுக்காததால், பதற்றமடைந்த ரவிசங்கர், உடனே தனது உறவினர்களிடம் தொடர்பு கொண்டு இந்த தகவலை கூறியுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு தம்பதியர் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த தம்பதியினரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஈரோட்டில் வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
தனியாக வசித்து வருவோரை குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டும் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 2024இல் திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில் தாய், தந்தை, மகன் என 3 பேர் கொல்லப்பட்டனர். அனைத்துக் கொலைகளுமே சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடக்கிறது. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளிகளை கூட கைது செய்யவில்லை. தமிழக காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?
பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா? திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இதனால், அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதலமைச்சர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழ்நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள்” என விமர்சித்துள்ளார்.