குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் மீது இருந்த கோபத்தில் பச்சிளம் குழந்தைகளை தலையணையை வைத்து, அமுக்கி கொலை செய்த நபரால், கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி சரிதா இந்த தம்பதிகளுக்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு பெர்லின் சஞ்சு, கேசவ் என்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான், கடந்த இரண்டு வருட காலமாகவே கணவன், மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு அதிகரித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
வழக்கம் போல கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மறுபடியும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவி சரிதாவை கடந்த 22 ஆம் தேதி செங்கல்பட்டில் இருக்கின்ற மாமியார் வீட்டில் விட்டுவிட்டு சுரேஷ் சொந்த ஊருக்கு வந்து விட்டார். அதன் பிறகு பள்ளிக்கு சென்று இருந்த இரண்டு மகன்களையும் காலை 11 மணி அளவில் வீட்டிற்கு அழைத்து வந்தார். மேலும், அவர்கள் இருவரையும் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்திருக்கிறார். அத்துடன், சிறுவர்களின் உடலை தூக்கில் தொங்க விட்டு,விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.
அதன் பிறகு, மாமியார் வீட்டிற்கு சென்ற சுரேஷ், அங்கு சென்று மாமியாரை கட்டையால் அடித்துள்ளார். அதன் பிறகு, காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். இந்த நிலையில் தான், பணி முடிந்து சுரேஷின் தாய், தந்தை இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இரண்டு பேரக்குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு, அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுரேஷிடம் இது பற்றி கேள்வி எழுப்பிய போது, நாங்கள் இருவரும் பிரிந்த பின்னர் குழந்தைகள் சிரமப்படக்கூடாது என்று தான் கொலை செய்தேன் என்று கூறியிருக்கிறார். கணவன், மனைவி பிரச்சனையில் குழந்தைகளை தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்தது, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.