சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சீதாலட்சுமி (61) என்ற பெண் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த நபர், அப்பெண் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றார். இதனால், அதிர்ச்சி அடைந்த சீதாலட்சுமி, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரையும் கண்டறிந்தனர். இதையடுத்து, புரசைவாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் திடீரென நுழைந்து 58 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.
அவரிடம் விசாரிக்கையில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அந்த நபர், புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது இலியாஸ். தனது மகனின் ஜாமீன் மனுவிற்காக செயின் பறித்ததை ஒப்புக் கொண்டார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் குமார் என்ற நபரை கொலை செய்த குற்றத்திற்காக அவரது மகன் முகமது ஃபியாஸ் (25) கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகனின் ஜாமீன் விண்ணப்பத்திற்காக பணம் திரட்ட வேண்டியிருந்ததால், செயினை திருடியதாக இலியாஸ் வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தின் அடிப்படையில் முகமது இலியாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.