fbpx

பங்காரு அடிகளார் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும்…! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது இரங்கல் செய்தியில்; மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.

அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார். கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது.

அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த திரு. பங்காரு அடிகளார் அவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர்கள் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர். பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடேங்கப்பா...! ரூ.1,200 கோடி வரியைப்பு செய்தது அம்பலம்...! உறுதிப்படுத்திய வருமானவரித்துறை...!

Fri Oct 20 , 2023
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1,200 கோடி ரூபாய் அளவிற்கு வரியைப்பு செய்துள்ளார் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா குழுமத்தின் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய சுமார் 100 இடங்களில் ஒரு வாரமாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகளும், மதுபான தொழிலில் 500 கோடிக்கு போலிச் செலவும், டிரஸ்ட்களில் இருந்து 300 கோடி ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டதும் […]

You May Like