மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், தனது சமீபத்திய அறிவிப்பில், நகரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருவதாகவும், 2024 டிசம்பர் இறுதி வரை தொடரும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் தெரிவித்தார்.
அதன்படி ஜனவரி 1 முதல், பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுப்பது, குற்றச் செயலாகக் கருதப்படும். மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிச்சை கொடுக்கும் பாவத்தில் பங்குதாரர்களாக இருக்க வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “ சாலைகளில் பிச்சை எடுப்பதற்காக மக்களைச் சுரண்டும் பல கும்பல்களை இந்தூர் நிர்வாகம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது. மேலும் சில பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் இந்த திட்டத்தில் இந்தூர் சோதனை நகரங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாததாக மாற்றும் முயற்சியில், பிச்சை கொடுப்பவர்களுக்கு எதிராக 2025 ஜனவரி 1 முதல் நிர்வாகம் எஃப்ஐஆர் பதிவு செய்யத் தொடங்கும் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தூரின் இந்த முன் முயற்சியானது , நாடு முழுவதும் 10 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாததாக மாற்றுவதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட மிகப்பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.
மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம், இது போன்ற பல சேவைகளை வழங்குகிறது.