காட்டுத் தீ சம்பவங்களைத் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றுக்குத் அமித் ஷா அறிவுறுத்தினார்.
வெள்ள மேலாண்மைக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று டெல்லியில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. நாட்டில் வெள்ள அபாயத்தைத் தணிப்பதற்கான விரிவான தொலைநோக்குக் கொள்கையை வகுப்பதற்கான நீண்டகால நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தின் போது, கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீது எட்டப்பட்ட முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வெள்ள மேலாண்மைக்கான கட்டமைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் பேரிடர் மேலாண்மை நடைமுறை, உயிரிழப்புகளே இல்லாத நிலை என்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருவதாக தெரிவித்தார். வெள்ள மேலாண்மை தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள ஆலோசனைகளை உரிய நேரத்தில் அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
வெள்ள முன்னறிவிப்பு தொடர்பாகப் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களையும் மறுசீரமைக்கும் செயல்முறையை விரைவாக முடிக்குமாறு இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் மத்திய நீர் ஆணையத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டார். சிக்கிம் மற்றும் மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து விரிவான ஆய்வு நடத்தி உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார். அனைத்து முக்கிய அணைகளின் வெள்ள நீர் வெளியேற்ற அமைப்புகளும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
காட்டுத் தீ சம்பவங்களைத் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றுக்குத் அமித் ஷா அறிவுறுத்தினார்.