டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் பயன் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, தொகுதி – I பதவிகளில் வரும் துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக மேம்பாடு உதவி இயக்குநர் உள்ளிட்ட 70 காலிப்பணியிடங்களுக்கும், தொகுதி-1A பதவிகளில் வரும் 2 வன உதவி பாதுகாவலர் காலிப்பணியிடங்களுக்கு என மொத்தம் 72 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 1 மற்றும் தொகுதி-1A பணிகள்) அறிவிப்பானது 01.04.2025 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் இன்று முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.