டாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும்.மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துகொண்டு விற்பனை செய்ய கூடாது. இனிவரும் காலங்களில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் அனைத்து செயல்பாடுகளையும் கணினிமயமாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கையில் கூறியதாவது ; தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் கணினி மயமாக்கல் திட்டமானது இராமநாதபுரம், அரக்கோணம். காஞ்சிபுரம் (வடக்கு). காஞ்சிபுரம் (தெற்கு), சிவகங்கை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் முழுவதுமாக செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நேர்வில், கணினி மயமாக்கல் திட்ட நடைமுறைகள் அனைவருக்கும் உரிய முறையில் முழுமையாக பயிற்றுவிக்கப்பட்டும். நடைமுறைபடுத்துதலில் ஏதேனும் சந்தேகம் அல்லது கடைப்பணியாளர்களின் தவறான செயல்பாடுகளால் ஏற்படும் பிழைகளுக்கு அவ்வப்போது தலைமை அலுவலகத்திலுள்ள கணிணி மயமாக்கலின் உதவிமையத்தின் (Help Desk) மூலம் தீர்வுக்கான வழிமுறைகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தவறான செயல்பாடுகளை (MIS-APPROPRIATION) கண்காணிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் (கணக்கு) ஆகியோரே இதற்கு முழு பொறுப்பாவார்கள். அவர்களிடம் துறைரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, மேற்கண்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி இனிவரும் காலங்களில் விற்பனை விவரங்கள் அனுப்பவதில் முரண்பாடுகள் நடைபெறாவண்ணம் செயல்பட்டு, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் அனைத்து செயல்பாடுகளும் கணினி மயமாக்கல் திட்டத்தினை தங்களின் மாவட்டங்களில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் முழுமையாக செயல்படுத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இச்சுற்றறிக்கையினை அனைத்து பணியாளர்களுக்கும் சார்பு செய்து வழங்கி ஒப்புதல் பெற்று கோப்பில் பாராமரிக்குமாறும், மேற்படி சுற்றறிக்கையினை சார்பு செய்து ஒப்புதல் பெற்றுக்கொண்டமைக்கு மாவட்ட மேலாளர்கள் அளவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையின் போது நுகர்வோர் விரும்பி கேட்கும் மதுபானங்களுடன் அதற்குண்டான இரசீதுகள் நுகர்வோர்க்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நுகர்வோர்க்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படும் பொழுது மட்டுமே ஸ்கேன் செய்து விற்கப்பட வேண்டும். மதுபான சில்லறை விற்பனை கடைகளில் இருப்பிலுள்ள மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு நுகர்வோர்க்கு விற்பனை செய்தல் கூடாது.
கடைப்பணியாளர்கள் விற்பனை செய்யும் போது ஸ்கேன் செய்யாமல், முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு விற்பனை செய்ததனாலேயே குறைவான தொகை அசல் விற்பனைத் தொகையை விட குறைவான தொகைக்கு விற்பனை செய்ததாக கருதப்படுகிறது. ஆக குறைவான தொகையென கண்டறியப்படும் தொகையின் மீது 50% அபராதத் தொகை, அபராதத் தொகை மீதான வட்டி 24% ஆண்டுக்கு மற்றும் ஜிஎஸ்டி 18% என 05/12/2024 முதல் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.