இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணி தனக்கு தான் என பிசிசிஐ உத்தரவாதம் அளித்தால் பயிற்சியாளர் பணிக்கு கவுதம் கம்பீர் விண்ணப்பிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் இல்லை என்று ஏற்கனவே டிராவிட் வெளிப்படையாக அறிவித்து விட்டதால் அடுத்த புதிய தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தற்போது பிசிசிஐ தீவிரப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் மே 27-ஆம் தேதி வரை புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்த வேளையில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு முக்கிய நபர்கள் இந்த பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்து வருகின்றனர். அதோடு இந்திய முன்னாள் வீரர்களும் இந்த பதவிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி இருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு கெளதம் கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த பேச்சு வார்த்தையில் கௌதம் கம்பீர் தனக்கு தான் அந்த பதவி வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தான் விண்ணப்பம் செய்வேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இப்போது கவுதம் கம்பீர் ஆலோசகராக உள்ள கொல்கத்தா அணி ஐபிஎல் தொடர் இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து நாளை விளையாட உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ நிர்வாகிகள் அனைவரும் சென்னை வரவுள்ள நிலையில், போட்டி முடிந்த பின் கம்பீர் மற்றும் பிசிசிஐ சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டால் விண்ணப்பம் செய்வார் என தெரியவருகிறது. வரும் 27 ஆம் தேதியுடன் விண்ணப்பம் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் நாளை இரவு கம்பீர் இறுதி முடிவு எடுப்பார் என நம்பப்படுகிறது.