காசா பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் 11 பேர், 30 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலின் காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2007ல் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது, 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தினர். இதையடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான போரை இஸ்ரேல் அரசு அறிவித்தது.
இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலாக நடந்து வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 ஐநா ஊழியர்கள் பலியாகினர். இப்பகுதியில் 14 ஐ.நா. நிவாரண முகாம்களும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த தாக்குதலில் ஐநா பள்ளிகளில் பயின்ற 30 மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காசா நகரில் இருந்து 1,87,500 பேர் வெளியேறி உள்ளனர். இவர்களில் 1,37,00 பேர் பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காசா நகரில் 790 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன. 5,330 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.