ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜன.10 திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் .பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு 31.12.2024-ம் தேதி முதல் 09.01.2025-ம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025-ம்தேதி முதல் 20.01.2025ம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்கவாசல்) வருகின்ற 10.01.2025-ம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். பின்னர் 11-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 16-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
ராப்பத்து 8-ஆம் திருநாளான 17-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. 18- ஆம் தேதி வழக்கம்போல் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 19-ஆம் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சொர்க்கவாசல் திறப்பினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியோர் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஜனவரி 10 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25 வேலை நாளாக இருக்கும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Read more ; விஜயை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் அண்ணாமலை..!! என்ன விஷயம்..?