தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இவ்விரு பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தமிழக பாஜக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்திருந்தார். இதற்கான, விருப்பமனுக்களை நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தார். அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி அறிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித் ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அதிமுக -பாஜக மற்றும் பிற கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என அமித் ஷா அறிவித்தார்.
இந்த கூட்டணி குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்; வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்..! தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம்.
மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம். தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும் என தெரிவித்துள்ளார்.