வரும் 26-ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டத்தில், அரசு பள்ளிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
குடியரசு தினத்தையொட்டி, 26-ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை, உறுப்பினர்கள், தொகுதி MLA-க்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். மக்கள் திட்டமிடல் இயக்கம் (people’s plan campaign) மூலம் (2024-25) ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
இந்த கூட்டங்களில், பள்ளிக்கல்வி சார்பில், அதிகாரிகள் அல்லது உள்ளூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக துாய்மை பணிகள் போன்றவை குறித்து, ஆசிரியர்கள் பேச வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.