கடந்த மாதம் கேரள மாநில அரசுப்பேருந்தில், திருச்சூரில் இருந்து கோழிக்கோடு சென்றபோது, மாடலும், இளம் நடிகையுமான நந்திதா சங்கரா என்பவர் முன், அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த 28 வயதான சாவத் ஷா என்பவர் ஆபாசமாக நடந்துக் கொண்டதாகத் தெரிகிறது. அது வைரலாகியுள்ளது.
நந்திதா சங்கரா மற்றும் இன்னொரு பெண்ணுக்கு மத்தியில் அமர்ந்திருந்த இளைஞர் சாவத் ஷா, முதலில் நந்திதாவிடம் இயல்பாக பேசுவது போன்று பேச்சுக் கொடுத்துக்கொண்டே தவறாக நடக்க முயன்ற நிலையில், சிறிது நேரத்தில் அவரது கண்முன்னே ஆபாசமாக நடந்துக்கொள்ள முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து உடனடியாக நந்திதா, தனது செல்ஃபோனை எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவாக பதிவுசெய்த நிலையில், அங்கிருந்து வெளியேற இளைஞர் சாவத் ஷா முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நந்திதா, பேருந்தில் கத்தி கூச்சலிட்டவுடன், பேருந்து நடத்துநர் பிரதீப் அருகில் வந்து விசாரணை செய்துக்கொண்டிருந்தபோதே, பக்கவாட்டு கதவு வழியாக இளைஞர் சாவத் ஷா வெளியேற முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் பேருந்தை நடத்துநர் நிறுத்த சொன்னதும், அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சிசெய்த நிலையில், சாவத் ஷாவைப் பிடித்து அடித்து, உதைத்து நெடும்பஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் பேருந்து நடத்துநர் பிரதீப். நந்திதா புகார் அளிக்க ஒத்துக்கொண்டதை அடுத்து பேருந்து நடத்துநர் அவ்வாறு செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கடந்த 18-ம் தேதி கைதுசெய்யப்பட்ட சாவத் ஷா மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதையடுத்து, சாவத் ஷா சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அவருக்கு பூமாலை போட்டு ஹீரோ போன்று ‘கேரளா ஆண்களுக்கான உரிமை சங்க’ தலைவர் வட்டியூர்காவு அஜித்குமார் தலைமையில் பல ஆண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதனை அங்கிருந்த சில ஊடங்களும், யூ-ட்யூப் சேனல்களும் படம் பிடித்து வெளியிட்டுள்ளது.