அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிதி பெறுவதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; அரசுப் பள்ளியில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெற்ற மாணவர்கள், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப்பெற்ற மாணவர்கள், அந்நிறுவனங்களில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல் , சேர்க்கை ஆணை , கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் அக்கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களுடன், அந்த மாணவரின் சொந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்து, மாவட்ட ஆட்சியர் படிப்பிற்காக ஆகும் மொத்த செலவின விவரங்களுடன், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதை ஊக்குவிப்பதற்காக் சாதிப் பாகுபாடின்றியும், ஆண்டு வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் அந்த மாணவரின் விவரங்களை ஆய்வு செய்து, முதலாம் ஆண்டிலேயே, நான்கு ஆண்டுகளுக்கான செலமினத் தொகைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தும், முதலாம் ஆண்டிற்கான செலவினை ஒதுக்கீடு செய்தும் வழங்கப்படும்.

7.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்கான செலவினத்தொகை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கு மின்னணு சேவை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் நிதி வழங்கப்படும். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காகவும் , சரிபார்த்தலை விரைவாக முடிப்பதற்கும் . வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தவும் ஒரு இணைய தளம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் ஏற்படுத்தப்படும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றதற்கான அப்பள்ளி தலைமை ஆசிரியரால் வழங்கப்படும் சான்றிதழ். தமிழகத்தில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் அளிக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல் , உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்ததற்கான சேர்க்கை ஆணை உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.