கொரோனா தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தொற்று நோய் தலையெடுத்திருக்கிறது . நாடெங்கிலும் எச்3என்2 இன்ஃபுலுயன்சா என்ற காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பலரும் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். லேசான காய்ச்சல் ஜலதோஷம் தலைவலி தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் தோன்றும் இந்த காய்ச்சல் மிகத் தீவிரமாக பாதித்து முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இறப்பு ஏற்படுத்தக் கூடியது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். தற்போது நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்து இருக்கிறது.
தற்போது இந்த காய்ச்சலுக்கு தமிழகத்தில் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிந்தாமணி பகுதியைச் சார்ந்த 27 வயது இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவா சுற்றுலா சென்று விட்டு வந்த நிலையில் கடுமையான காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்நிலையில் அவரது சளி மற்றும் இரத்த சாம்பில்கள் சேகரிக்கப்பட்டு மருத்துவ ஆய்விற்காக அனுப்பப்பட்டிருந்தன. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதன்படி அந்த இளைஞர் எச்3என்2 இன்ஃப்ளுயுன்சா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அந்த முடிவுகள் தெரிவித்து இருக்கின்றன. மேலும் தமிழகத்தில் 545 பேருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் இருப்பதாக பிப்ரவரி மாத நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.