கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. இந்தியாவில் H3N2 வைரஸால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்..
மேலும் H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுய சிகிச்சைக்கு பதிலாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகலாம்.. எனவே ஒருவர் கவனமாக இருக்க வேண்டிய H3N2 வைரஸின் சில அறிகுறிகள் குறித்து தற்போது பார்க்கலாம்..
அதிக காய்ச்சல் : H3N2 நோயாளிகள் 6-7 நாட்கள் வரை நீடித்த காய்ச்சலை அனுபவிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இதற்கு முன்பு 3-4 நாட்கள் மட்டுமே காய்ச்சல் இருந்த நிலையில், தற்போது 7 நாட்கள் வரை காய்ச்சல் உள்ளது… காய்ச்சலைத் தவிர, நோயாளிகள் குளிர் காய்ச்சலாலும் பாதிக்கப்படலாம்.
தொடர் இருமல் : காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, வறண்ட இருமல் ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த இருமல் பொதுவாக தீவிரமானது மற்றும் குறைய 10 முதல் 12 நாட்கள் ஆகலாம். இருமல் தவிர, தொண்டை வலியும் ஏற்படலாம்.
நிமோனியா : H3N2 வைரஸால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் தங்கள் நுரையீரலில் வைரஸ் அதிக அளவில் பரவுவதை அனுபவிக்கிறார்கள், இதன் விளைவாக நிமோனியா ஏற்படலாம். நிமோனியா என்பது நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் தொற்று காரணமாக வீக்கமடையும் ஒரு நிலை ஆகும். இது காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் நிமோனியா காரணமாக உயிரிழப்பு கூட ஏற்படலாம்..
பலவீனம் : H3N2 வைரஸ், சோம்பல், சோர்வு மற்றும் தீவிர பலவீனத்தை ஏற்படுத்தும். மற்ற அறிகுறிகள் குறைந்த பிறகும் இந்த அறிகுறிகள் பல வாரங்கள் வரை நீடிக்கும். சிலர் முதுகு, கை மற்றும் கால்களில் தீவிரமான தொடர்ச்சியான உடல் வலியை அனுபவிக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம்.. இது நிலைமையை மோசமாக்கலாம்.. மேலும் தொடர்ச்சியான வாந்தி, மூச்சுத் திணறல், குறைந்த இரத்த அழுத்தம், வலிப்பு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்..