ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தாலே முதலில் நினைவிற்கு வருவது பழங்கள் தான். பழங்களில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது என்று நமக்கே தெரியும். அந்த வகையில், நாம் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ஆரோக்கியமான செரிமான அமைப்பை உருவாக்குகிறது.
அது மட்டும் இல்லாமல், பழங்கள் சாப்பிடும் போது நமது குடல் சீராக இயங்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. எல்லா பழங்களுமே நல்லது தான். ஆனால் குறிப்பாக சீதாப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள். சீதாப்பழத்தின் சதை பகுதியானது, இனிப்பு மற்றும் மிக லேசான புளிப்பு சுவையை கொண்டது.
சென்னை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்தவரும், தி கிளெஃப்ட் அண்ட் கிரானியோஃபேஷியல் சென்டரில் பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணருமான தீபலட்சுமி, சீத்தாப்பழத்தின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறும் போது, “சீத்தாப்பழத்தை தினசரி சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
இந்த பழத்தில் ஏராளமான வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும், இதில் நார்ச்சத்து போன்ற மினரல்ஸ்களும் அதிகம் உள்ளது” என்றார். இதனால் சீதாப்பழத்தை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது, மெட்டபாலிசம் அதிகரிக்கும், கண் பார்வை மேம்படும், இதய நலன் மற்றும் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.
இது மட்டும் இல்லாமல், சருமம் மிருதுவாக இருக்கும், வாதத்தை அமைதிப்படுத்தும், எலும்புகளை வலுவாக்கும், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, பெருங்குடல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கும். மேலும், இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் மன அழுத்தத்தைக் குறைக்கும்.