fbpx

கனமழை அலர்ட்… தயார் நிலையில் 15 தேசிய பேரிடர் மீட்பு குழு…! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு…!

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவத்தில் இதுவரை சராசரி மழையளவை விட 6 விழுக்காடு அதிக மழைப்பொழிவை தமிழ்நாடு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக இராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில் கனமழையினை எதிர்கொள்ள சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் 80 ஜே.சி.பிக்களும், 47 மோட்டார் பம்புகளும், 111 படகுகளும், 63 மரம் அறுப்பான்களும் மாவட்ட நிருவாகத்தால் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 125 ஜே.சி.பிக்களும், 75 படகுகளும், 250 ஜெனரேட்டர்களும், 281 மரம் அறுப்பான்களும் மாவட்ட நிருவாகத்தால் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 64 பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், 34 பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு எஞ்சியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மழைநீரை வெளியேற்ற 27 ஜே.சி.பிக்களும், 42 மோட்டார் பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கனமழையின் காரணமாக பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் மொத்தம் 4 நிவாரண முகாம்களில் 190 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக எம். வள்ளலார் விரைந்துள்ளார்.

நாகப்பட்டினம், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 20 செ.மீட்டர் அளவுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையினை எதிர்கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போதுமான உபகரணங்கள் தயாராக உள்ளன. மேலும், மண்டல அளவிலான மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 23.11.2024 அன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், இது அடுத்த 2 நாட்களில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, 25.11.2024 முதல் 27.11.2024 வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம். இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

English Summary

Heavy rain alert… 15 National Disaster Response Teams on standby

Vignesh

Next Post

இளம் வயதிலேயே வழுக்கை இருக்கா?? காரணம் இது தான்..

Fri Nov 22 , 2024
this-is-the-reason-for-hairfall

You May Like