ரயில்களில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு, பயணச்சீட்டு முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன.. இந்நிலையில், இந்திய ரயில்வே இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. ரயில்வேயின் சுற்றறிக்கையில் “ 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை மற்றும் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம். இருப்பினும், குழந்தைகளுக்கென தனியாக ஒரு பெர்த் தேவைப்பட்டால், டிக்கெட்டை முன்பதிவு செய்வதன் மூலம் வயது வந்தோருக்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இந்த நோக்கத்திற்காக, பயணிகள் ரயில்களில் குழந்தைகளுக்கான இலவச டிக்கெட் வசதியைப் பெறுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இருப்பினும், பயணிகள் 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பெர்த் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், முழுத் தொகையும் செலுத்தப்பட வேண்டும்..” என்று தெரிவித்துள்ளது..
இதனிடையே இந்திய ரயில்வே சமீபத்தில் லக்னோ மெயிலின் ஏசி மூன்றாவது வகுப்பில் குழந்தை பெர்த் விருப்பத்தை சேர்த்தது.. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பயணிகளின் வசதிக்காக, ஐஆர்சிடிசி மற்றும் ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை வழங்கும் முறையை இந்திய ரயில்வே இப்போது அமல்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள்
- இந்திய ரயில்வேயின் வழிகாட்டுதல்களின்படி, பயணிகள் 5-11 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு முழு பெர்த் எடுத்தால், முழு கட்டணத்தையும் ரயில்வேக்கு செலுத்த வேண்டும்.
- அவர்கள் முழு பெர்த் எடுக்கவில்லை என்றால், அவர்கள் டிக்கெட் விலையில் பாதி மட்டுமே செலுத்த வேண்டும்.
- 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளின் பெயர்களை நிரப்பிய பிறகு, பயணியர் முன்பதிவு அமைப்பு குழந்தை பெர்த் எடுக்க வேண்டாம் என்ற எந்த விருப்பத்தையும் வைக்கவில்லை.
IRCTC மூலம் குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?
- IRCTC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை irctc.co.in/mobile இல் பார்வையிடவும். அல்லது உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள பிளே ஸ்டோரில் இருந்து IRCTC செயலியைப் பதிவிறக்கவும்.
- புதிய பயனர்களுக்கு, நீங்கள் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.
- உங்களின் தற்போதைய IRCTC பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்.
- முகப்புப் பக்கத்தில், ‘Train Ticketing’ என்ற பிரிவின் கீழ் உள்ள ‘Plan My Bookings’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது, உங்கள் பயணத் தேதி, ரயில் மற்றும் புறப்படும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு, ‘Search Trains’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- ரயில்களின் பட்டியல் உங்கள் திரையில் தோன்றும்.
- ரயில்களைத் தீர்மானித்த பிறகு, பயணிகளைச் சேர்க்க, ‘Passenger Details’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் உள்ளிட்ட அனைத்து முன்பதிவு விவரங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்த, ‘Review Journey Details’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது, பணம் செலுத்த ‘Proceed to Pay’ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.