மனைவியின் உடல் பருமன் குறித்து உடல் கேலி செய்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வெள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு துர்கா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் துர்காவின் உடல் பருமன் குறித்து அடிக்கடி கிண்டல் செய்து வந்திருக்கிறார் அவரது கணவர் மணிகண்டன். தான் குண்டாக இருப்பது குறித்து கிண்டல் செய்தால் தற்கொலை செய்து கொள்வதாக துர்கா தெரிவித்துள்ளார். இதனை மணிகண்டன் விளையாட்டாக எடுத்து இருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இரவு உணவு அருந்தியுள்ளனர் .
அப்போது மனைவி குண்டாக இருப்பது குறித்து மீண்டும் கிண்டல் செய்து இருக்கிறார் மணிகண்டன். இதனால் விரக்தி அடைந்த அவரது மனைவி துர்கா சமையலறைக்குச் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றிருக்கிறார் . இதனைத் தொடர்ந்து மணிகண்டன் அவரை சமாதானம் செய்துள்ளார். இந்நிலையில் தற்செயலாக சமையலறைக்குச் சென்ற துர்காவின் மீது அடுப்பில் இருந்த நெருப்பு பட்டு தீப்பிடித்து இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மணிகண்டன் தீயை அணைத்து தனது மனைவியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டன் இடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.