இரண்டாவது திருமணம் செய்ய விரும்பிய கணவன், முதல் மனைவி மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு மொட்டை அடித்து, தெருத்தெருவாக இழுத்துச் சென்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர சினிமாவின் துணை நடிகரான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெடகொண்டேபுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு (33). ஆந்திர சினிமாவில் துணை நடிகராக பணிபுரிந்து வருகிறார். தன்னுடன் பணியாற்றிய ஆஷா (26) என்கிற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். ஹைதராபாத்தில் வசித்து வந்த இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு.
சில வருடங்கள் நன்றாக சென்ற இவர்களது இல்லற வாழ்க்கையில், புயல் வீசத் தொடங்கியது. ராம்பாபு இரண்டாவது திருமணம் செய்ய விரும்பினார். தனது மனைவி ஆஷாவை அதற்கு சம்மதிக்குமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுத்த ஆஷாவை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ஆஷா ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பெயர் கணவர் ராம்பாபுவின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். ராம்பாபுவின் பெற்றோர் இதில் தலையிட்டு, ஆஷாவை சமாதானம் செய்து வழக்கை திரும்ப பெற செய்தனர். பின்பு அவர்களை பெடகொண்டேபுடி கிராமத்திற்கே அழைத்து சென்றனர்.
அங்கு அதிகாரி ஒருவரிடம் வாகன ஓட்டுனராக பணியில் சேர்ந்தார் ராம்பாபு. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆஷாவை அடித்துக் கொடுமைப்படுத்த தொடங்கினார். இதனால் பெடகொண்டேபுடி கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆஷா புகார் அளித்தார். பின்பு தனது மகனுடன் ஹைதராபாத்துக்கு சென்று வாழத் தொடங்கினார்.
இதற்கிடையில், ராம் பாபுவிற்கு இரண்டாவது திருமண வேலைகள் நடைபெற்று வந்தது. தகவலறிந்து வந்த ஆஷா அதற்கு மறுப்பு தெரிவித்தார். பின்னர் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டு, குழந்தைக்கு ஜீவனாம்சம் கொடுத்த பின்னர் திருமணத்தை செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதுவரை தான் கொடுத்த புகாரை திரும்ப பெற போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராம்பாபு, தனது மனைவி ஆஷாவை வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, அடித்து, தலையை மொட்டை அடித்துள்ளார். பின்பு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை தெருத்தெருவாக இழுத்துச் சென்றுள்ளார். இதனைக் கண்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், ராம் பாபுவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.