மரணம் என்பது எந்த வயதிலும் வரக்கூடியதாக இருந்தாலும் தற்போது இளம் வயதினர் அதிக அளவில் மாரடைப்பால் இறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் எல்லாம் மாரடைப்பு என்பது ஒரு நடுத்தர வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் நோயாக இருந்தது. ஆனால் தற்போது மாரடைப்பால் ஏற்படும் இளம் வயது மரணங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.
தற்போது ஹைதராபாத் கல்லூரியில் படித்து வந்த ராஜஸ்தானை சார்ந்த 17 வயது மாணவன் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள சிஎம்ஆர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த ராஜஸ்தானை சார்ந்த சச்சின் என்ற மாணவன் பள்ளி வளாகத்தில் மயக்கமடைந்து விழுந்திருக்கிறான். இதனையடுத்து அந்த மாணவனை சக மாணவர்களும் கல்லூரி நிர்வாகமும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த மாணவர் மாரடைப்பால் மரணமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 17 வயது மாணவன் மாரடைப்பால் கல்லூரி வளாகத்தில் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.