தந்தை பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் தகாத கருத்தை பேசியது குறித்து மனபூர்வமாக வருத்துவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல அமைச்சர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளன. குறிப்பாக, அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்தது.
இந்த சூழலில் தான், மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்து நிற்கிறார் பொன்முடி. அதாவது, விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா..? நாமமா..? என்ற கேட்டு அதற்கு ஒரு மோசமான விளக்கத்தை கொடுத்து அனைவரையும் முகம் சுழிக்கும் வகையில் பேசியிருந்தார். சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையானது.
இதுதொடர்பான இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி பலரது கண்டனத்தையும் பெற்றது. இந்நிலையில் தான், திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் தகாத கருத்தை பேசியது குறித்து மனபூர்வமாக வருத்துவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, பலரது மனதை புண்படும் வகையில் எனது பேச்சு அமைந்துவிட்டது. எனது பேச்சால் பலரும் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்து நான் மிக வருந்துகிறேன். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள தனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து மிகவும் மனம் வருந்துகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மன்னிப்புகேட்டு அறிக்கை வெளியிட்டார்.
Read more: தமிழகமே எதிர்பார்ப்பு..!! இறுதி விசாரணையை தொடங்கிய தேர்தல் ஆணையம்..!! இரட்டை இலை யாருக்கு சொந்தம்..?