ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
2025 பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கி மார்ச் 10 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் இத்தொடர் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ஐசிசி அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இத்தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில மொத்தம் 12 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த சுற்றின் கடைசி போட்டி மார்ச் 2 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதேபோன்று, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் தகுதிச் சுற்று போட்டி துபாயில் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 20 இல் துபாயில் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதி போட்டி மாரச் 4 ஆம் தேதி துபாயிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி மார்ச் 5 ஆம் தேதி லாகூரிலும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிப் பெற்றால், அப்போட்டி மார்ச் 9 ஆம் தேதி துபாயில் நடைபெறும், ஒரு வேளை இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவி்ல்லையென்றால், வேறு இரு அணிகள் பங்கேற்கும் அப்போட்டி லாகூரில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை இந்த முறை பாகிஸ்தான் நடத்தவுள்ள நிலையில், அந்நாட்டுக்கு சென்று விளையாட இயலாது என்று இந்திய அணி அறிவித்திருந்தது. இதையடுத்து இத்தொடரில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடைபெறும் என்று ஐசிசி அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி இவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளது. இத்தொடரில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளும், குரூப்- பி -யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.