அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. ஆம் ஆத்மி இரு மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேசிய அளவிலான வியூகங்களை வகுப்பதாக தெரிகிறது.. இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த யாத்திரை மூலம் அவரை அடுத்த பிரதமர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், இன்று மக்களவைத் தேர்தல் நடந்தால் அடுத்த பிரதமர் யார் என்பதை அறிய இந்தியா டுடே-சி-வோட்டர் கணக்கெடுப்பு நடத்தியது. பொதுத் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக பொது மக்களின் மனநிலையை கணக்கெடுப்பு அளவிடுகிறது.
இன்று தேர்தல் நடந்தால், நாட்டில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கிறது.அதன்படி 543 மக்களவைத் தொகுதிகளில் 298 இடங்களை என்டிஏ கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடங்களை வெல்லக்கூடும். மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மற்றவை சுமார் 92 இடங்களில் வெற்றி பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
வாக்கு சதவீதத்தை பொறுத்த வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 29 சதவீத வாக்குகளும், மற்றவர்களுக்கு 28 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இன்று தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு மட்டும் 284 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 68 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 191 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வாரியான வாக்கு சதவீதத்தை பொறுத்த வரை, பாஜக 39 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 22 சதவீத வாக்குகளையும் மற்ற கட்சிகள் 39 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது
2019 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. 2019 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 52 இடங்கள் உட்பட 91 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..