பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்களின் விற்பனை பற்றி ரகசியமாகத் தகவல் தெரிவித்தால், உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் கண் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வை தொடங்கி வைத்தபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ”உலகம் முழுவதிலிருந்தும் 3,500 கண் மருத்துவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளதாகவும், கண் மருத்துவச் சிகிச்சையில் பயன்படுத்தப்பட உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் ராஜனுக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது என்றும் வருமுன் காப்போம் திட்டத்தின் படி மாநிலம் முழுவதும் 1,260 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.43 கோடி மக்களை இலக்காக வைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளளதாகவும் இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த கஞ்சா விற்பனையைக் கடந்த ஓராண்டாகத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிவருவதாகவும் குறிப்பிட்டார். மிக விரைவில் கஞ்சா விற்பனை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்த அவர், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். அப்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனை பற்றி ரகசியமாகத் தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர் உறுதியளித்தார்.