புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா வழங்கப்படும் என வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் சார்பில் 1.3.2024 அன்று பிறப்பித்த அரசாணையின்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் உட்பட 18 உறுப்பினர்கள் கொண்ட மாநில அளவிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு 13.6.2024, 9.12.2024 ஆகிய நாட்களில் கூடி வழங்கிய அறிவுரைகளின் தொடர்ச்சியாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனை இடங்களில் 2,648 பட்டாக்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனை இடங்களில் 3,909 பட்டாக்கள், நகர நிலவரித்திட்டத்தின் கீழ் 58,979 பட்டாக்கள். ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வரன்முறை செய்து வழங்கப்பட்ட 626 மனை பட்டாக்கள் வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளன. நத்தம் நிலஆவணங்களில் ரயத்துவாரி மனை என மாற்றம் செய்யப்பட்ட சோழிங்கநல்லூர், ஆலந்தூர், திருவொற்றியூர், மதுரவாயல் மற்றும் மாதவரம் வட்டங்களில் 19.114 பட்டாக்கள், நகர நிலஅளவை ஆவணங்களில் தனியார் நிலங்கள் சர்க்கார் நஞ்சை/புஞ்சை என பதிவாகியுள்ளதை சரி செய்து ரயத்துவாரி நஞ்சை/புஞ்சை என வகைபாடு மாற்றம் செய்யப்பட்ட 4,112 பட்டாக்கள். ஆக மொத்தம் நாளது தேதி வரை 89,388 பட்டாக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஜூன் 2024 முதல் டிசம்பர் 2024 வரை 68,074 பட்டாக்களும். தற்போது ஜனவரி 2025 முதல் நாளது தேதி வரை 21,314 பட்டாக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, செனாய் நகர் விங்ஸ் கன்வென்ஷென் சென்டரில் நடைபெற்ற அரசு விழாவில் 2,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்; இன்றைக்கு சென்னை அண்ணா நகர் தொகுதி செனாய் நகரில் 2 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பெருமை அடைகின்றேன். ஏற்கனவே நம்முடைய திராவிட மாடல் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, மாதவரம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், ஆவடி போன்ற இடங்களில் நானே நேரில் சென்று மக்களுக்கு பட்டாக்களை வழங்கி வருகின்றேன். அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 500 பேருக்கு பட்டாக்களை நாம் இந்த மேடையில் வழங்க இருக்கின்றோம்.
இன்றைக்கு திராவிட மாடல் அரசை பார்த்து, சில பேர் திராவிட மாடல் என்றால் என்ன? திராவிட மாடல் அரசு என்றால் என்ன? என்று கேட்கின்றார்கள். ஏழை. எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற இந்த சிறப்பான மேடையில் இருந்து அதற்கான பதிலை சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். “இன்னாருக்கு மட்டும் தான் இது” என்பதற்கு எதிராக, எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வது தான் உண்மையான திராவிட மாடல் அரசு. இந்த இலக்கை நோக்கி தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள் என்றார்.
புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா வழங்க தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ் கூறியுள்ளார். நிகழ்ச்சி பேசிய அவர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் தெரிவித்தார். இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 86,388 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.