திருச்சியில் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை மற்றும் மாமனார் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சார்ந்த மதுராபுரி பதினொன்றாவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மகன் இன்பராஜிற்கு முசிறி சிந்தாமணி தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் நிச்சயத்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சனை மற்றும் நகை என அனைத்தையும் எவ்வித குறையும் இன்றி சிறப்பாக செய்து கொடுத்துள்ளனர் பெண் வீட்டார். திருமணத்திற்கு பின் கூட்டுக் குடும்பத்தோடு மாப்பிள்ளை வீட்டில் வசித்து வந்திருக்கிறார் அந்த இளம் பெண். இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே திருமண வாழ்க்கை அந்தப் பெண்ணிற்கு கசக்க ஆரம்பித்திருக்கிறது. கணவர் மேற்கொண்டு பத்து லட்ச ரூபாய் மற்றும் 10 பவுன் நகை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி இருக்கிறார். மேலும் அந்தப் பெண் தனது பெற்றோர் இந்த திருமணத்திற்கே கடன்பட்ட நிலையில் மேற்கொண்டு அவர்களிடம் எப்படி கேட்பது என தெரியாமல் கணவரிடம் பக்குவமாக எடுத்துரைத்திருக்கிறார். ஆனால் இதையெல்லாம் காது கொடுத்தே கேட்காமல் தனது மனைவியை தினமும் அடித்து உதைத்து சித்தரவதை செய்திருக்கிறார் கணவர் இன்பராஜ் .
இந்நிலையில் இதை விட கொடுமையாக அந்தப் பெண்ணின் மாமனார் மோகன்ராஜ் தனது மருமகளிடம் பாலியல் சீண்டல்களை செய்வதைக் கண்டு அவர் அதிர்ந்து போய் இருக்கிறார் அந்த இளம் பெண். தன் கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் மருமகளிடம் வந்து பாலியல் சேட்டைகளை செய்திருக்கிறார் மாமனார் மோகன்ராஜ். தனது கணவரிடம் இதைக் கூற பயந்து அந்த இளம் பெண் விலகிச் சென்ற போதும் இடைவிடாமல் துரத்தி இருக்கிறார் மாமனார். இதனால் ஒவ்வொரு நொடியும் அந்த வீட்டில் நரக வேதனையை அனுபவித்து இருக்கிறார் அந்த இளம் பெண். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும் அந்த வீட்டில் இருந்த யாரும் இவருக்கு உதவி செய்வதும் இல்லை. இதன் காரணமாக தனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த இளம் பெண் முசிரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கூறியிருக்கிறார். இதனை அடுத்து அவரது பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் இன்பராஜ் அவரது தந்தை மோகன்ராஜ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த கணவரின் தாயார் ராஜேஸ்வரி மற்றும் கணவரின் தம்பி மகேஷ் அவரது சகோதரி பிரேமலதா ஆகியோரின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை இந்த புகார் சம்பந்தமாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.