நாடு முழுவதும் இன்று இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று கோலாகலமாக இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு, சென்னையில், கோட்டை கொத்தளத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடியை ஏற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரையை ஆற்றி வருகிறார்.
தமிழக அரசின் சார்பாக, தலைமைச் செயலகம் அமைந்திருக்கின்ற ராஜாஜி சாலையில், சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற கோட்டை கொத்தளத்தில், தேசிய கொடியை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
சுதந்திர தின விழாவில், பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை போர் நினைவுச் சின்னத்தில் இருந்து, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மோட்டார் சைக்கிள் மூலமாக அணிவகுத்து அழைத்து வந்தார்.
இதற்காகவே கோட்டை கொத்தளத்திற்கு முன்பாக ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் மேடை அருகே வந்து இறங்கிய முதல்வரை, பூங்குத்துக் கொடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வரவேற்றார். அதன் பிறகு, தெற்கு பிராந்திய தலைமை படை தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுவை கடற்ப்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படை தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல் படை ஐஜி, தமிழக டிஜிபி போன்றோர் முறைப்படி தலைமைச் செயலாளரால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
அதன் பிறகு, காவல்துறையினர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து, கோட்டை கொத்தளத்திற்கு, வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், மூவர்ண கொடியை ஏற்றி வைத்துள்ளார். அப்போது மூவர்ணத்தில் பலூன்கள் பறக்க விடப்பட்டனர். மேலும், காவல் இசை குழுவினர், தேசிய கீதத்தை இசைத்து மரியாதை செலுத்தினர்.