ஆகஸ்ட்-15ம் தேதியான, நாளை, மறுநாள் இந்தியா முழுவதும், 76வது சுதந்திர தின விழா மிகப் பிரமாண்டமான முறையில், கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, அதோடு, காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது.
அந்த விதத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் அணிவகுப்பு இறுதி ஒத்தகை நடந்து வருகிறது. ஆகவே, சென்னை மெரினா கடற்கரை சாலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில், ஒத்திகை நிகழ்ச்சிகள் கடந்த நான்காம் தேதி முதல் ஆரம்பமானது. ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. ஏற்கனவே, கடந்த நான்காம் தேதி, பத்தாம் தேதி உள்ளிட்ட தினங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று அணிவகுப்பின் இறுதி ஒத்திகை நடந்து வருகிறது.
கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவல் படை போன்ற ஏழு படை பிரிவுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், பங்கேற்று இருக்கிறார்கள்.
இந்த ஒத்திகைக்காக ராஜாஜி சாலையிலும், காமராஜர் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஒத்திகை சமயத்தில்,நேப்பியர் பாலத்திலிருந்து, போர் நினைவு சின்னம் வரையிலும், காமராஜர் சாலை மற்றும் போர் நினைவுச் சின்னத்திலிருந்து, இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையில் அமைந்திருக்கும் ராஜாஜி சாலையிலும், கொடிமர சாலையிலும் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருக்கிறது.