இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் தொடங்கியது. முதற்கட்டமாக 212 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது சிறப்பு விமானம். இஸ்ரேலில் இருந்து வந்தவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.
ஆபரேஷன் அஜய்யின் கீழ் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஏஐ 1140 என்ற விமானம் வியாழக்கிழமை இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றது. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசு ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கியுள்ளது. 212 பேருடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
முன்னதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “இந்திய குடிமக்களை அழைத்துச் செல்வதற்காக முதல் சார்ட்டர் விமானம் இஸ்ரேல் சென்றடையும், மேலும் இன்று காலை இந்தியா திரும்ப வாய்ப்புள்ளது” என்றார். சுமார் 18,000 இந்தியர்கள் தற்போது இஸ்ரேலில் வசித்து வருவதாகவும், பெரும்பாலான மக்கள் மேற்குக் கரையிலும், மூன்று முதல் நான்கு சதவீதம் பேர் காஸாவிலும் இருப்பதாகவும் அவர் கூறினார்.