PM Modi: கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் பங்களிப்பை கவுரவப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடிக்கு டொமினிக்கா நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கரீபிய நாடுகளில் ஒன்று டொமினிக்கா தீவு. கொரோனா பெருந்தொற்று பரவலின் போது, அந்த நாட்டிற்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அதே போல் பல உதவிகளை அளித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா அளித்த உதவிகளுக்காக டொமினிக்காவின் மிக உயரிய விருது மோடிக்கு அளிக்கப்படும் என டொமினிக்கா நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். டொமினிக்கா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் டொமினிக்காவிற்கு மோடி அளித்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த கவுரவம் வழங்கப்படுகிறது.
டொமினிக்காவின் இந்த அங்கீகாரம் மோடியின் உலகளாவிய ராஜதந்திர முயற்சிகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில், குறிப்பாக தொற்றுநோய்களின் போது இந்தியாவின் பங்கிற்கு ஒரு சான்றாகும். வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை கயானா நாட்டின் ஜார்ஜ்டவுன் நகரில் நடக்கும் இந்தியா- கரீபிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடிக்கு இவ்விருதை அதிபர் சில்வானி பர்ட்டன் வழங்குவார் என குறிப்பிட்டுள்ளார்.