2022-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளை கொண்ட 95 நாடுகளின் பட்டியலில், இந்திய உணவு வகைகளுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.
உலகின் சிறந்த உணவு வகைகள் குறித்து ‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ‘உலகம் முழுவதும் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. 95 நாடுகளின் சிறந்த உணவுகள் மற்றும் அதனை விரும்பி சாப்பிடுவோரின் கருத்துகளின்படி பட்டியலிடப்பட்டது. இந்த பட்டியலில் 4.54 புள்ளிகளுடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

2022ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தையும், கிரீஸ் 2வது இடத்தையும், ஸ்பெயின் 3வது இடத்தையும், ஜப்பான் 4வது இடத்தையும் பிடித்துள்ளன. பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது.
டேஸ்ட் அட்லஸ் விருதுகள் 2022 முடிவுகளின்படி, 400க்கும் மேற்பட்ட பொருட்களில் கரம் மசாலா, நெய், மலாய், வெண்ணெய் பூண்டு நான் மற்றும் கீமா ஆகியவை இந்தியாவில் சிறந்த உணவுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மும்பையின் ஸ்ரீ தாக்கர் போஜனலே, பெங்களூருவின் காரவல்லி , டெல்லியின் புகாரா, குருகிராமின் கொமோரின் உள்ளிட்ட 450 க்கும் மேற்பட்ட இடங்கள் இந்திய உணவு வகைகளை முயற்சிப்பதற்கான சிறந்த உணவகங்கள் என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.