நெல்லை மாவட்டம் விகே.புரம் அருகே அகஸ்தியர்பட்டியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். மேலும், அந்த நபர் ஆபாச வீடியோ கால் செய்யுமாறு வற்புறுத்தி மிரட்டி வந்துள்ளார். இதனால், அந்த இளம்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த பிரதீப் (22), என்பது தெரியவந்தது, இதையடுத்து, பிரதீப்பை கைது செய்து அவரிடமிருந்து ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் 4 சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் இளம்பெண்களின் புகைப்படத்தை தனியாக எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பி, அவர்களை தனது பாலியல் ஆசைக்கு இணங்கும் படி மிரட்டல் விடுத்து வந்தது தெரியவந்ததுள்ளது. இதுபோன்று பல இளம்பெண்களை பிரதீப் மிரட்டியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும், அப்படி அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.