2023-24 காலாண்டிற்கான ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. வட்டி 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் இந்த வட்டி வீதம் பொருந்தும். திருத்தப்பட்ட விதிகள் படி, 2023-24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
அறிவிப்பின்படி, ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சேமிப்பு வைப்புத் தொகை, தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட எந்த தபால் அலுவலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமும் உயர்த்தப்படாமல் அதே வட்டி விகிதத்தின் கீழ் தொடர அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, சேமிப்பு டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 4% ஆகவும், ஓராண்டு கால வைப்பு வட்டி விகிதம் 6.9% ஆகவும், இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு வைப்புகளுக்கான வட்டி விகிதம் 7% ஆகவும், 5 ஆண்டுகால வைப்பு தொகை 7.5% ஆகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 8.2% மற்றும் மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்தில் 7.4% வட்டி விகிதம் உள்ளது. தேசிய சேமிப்புச் சான்றிதழ், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் ஆகியவை மாறாத வட்டி விகிதங்களைக் கொண்ட பிற திட்டங்களாகும்.