ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் காரில் மனைவியுடன் சென்ற பிரபல ரவுடியின் கார் மீது மற்றொரு காரை மோதி விபத்து ஏற்படுத்தி, ரவுடியை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் தப்பியோடிய மூவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை.
காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே?” என பதிவிட்டுள்ளார்.