அடுத்த இரண்டு நாட்களில் பாஜக மாநில தலைவர் யார் என்கின்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை அண்ணாமலை முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும். அந்தவகையில், செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, உட்கட்சி தேர்தலும் தொடங்கப்பட்டன. அதில் கிளைத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் போட்டி போடுவதாக செய்திகள் வெளியாக்கின. ஆனால் கட்சியில் பெரும்பாலான நபர்கள் மீண்டும் அண்ணாமலையே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என்கின்ற கருத்தை அமைத்து வருகின்றனர். அடுத்த இரண்டு நாட்களில் மாநில தலைவர் யார் என்கின்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.