கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்புகள் தமிழ்வழியில் மட்டுமே நடத்தப்படும்.
இப்பயிற்சிக்கான கட்டணமாக ரூ. 4450/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 34 நாட்களுக்கு 100 மணிநேர பயிற்சியாக நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி முடித்தவர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நகை தொழிற் கூடங்கள் மற்றும் நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக (Jewel Appraiser) பணிவாய்ப்பு பெற வாய்ப்புகள் உள்ளதுடன் சுய தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண். 215, பிரகாசம் சாலை, பிராட்வே சென்னை-1 என்ற முகவரியில் 13.04.2025 வரை வழங்கப்படவுள்ளது. தகுதியான நபர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வருகின்ற 15.04.2025 முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும், இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விபரங்களைப் பெற சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை 044-25360041 என்ற தொலைபேசி எண்ணிலும், 9444470013, 9042717766 என்ற கைபேசி எண்களிலும் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.