கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா ஹைதராபாத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “கன்னட நடிகை ஷோபிதா ஷிவண்ணா அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார். அவர் பிஎஸ் கச்சிபௌலி எல்லைக்குட்பட்ட கோண்டாப்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்
ஷோபிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. காவல்துறையினர் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
கன்னட திரையுலகில் ஷோபிதா சிவன்னா ஒரு திறமையான நடிகையாக அறியப்படுகிறார். இவர் எரடோண்ட்லா மூரு, ஏடிஎம்: கொலை முயற்சி மற்றும் வந்தனா உட்பட பல பிரபல கன்னட படங்களில் பணிபுரிந்தார். மேலும் காலிபட்டா மற்றும் மங்கள கௌரி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து நடித்தார்.
யார் இந்த ஷோபிதா சிவன்னா?
1992-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி பெங்களூருவில் பிறந்த ஷோபிதா, சிறு வயதிலிருந்தே கலை மற்றும் பொழுதுபோக்குகளில் ஆர்வம் கொண்டிருந்தார். பால்ட்வின் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (என்ஐஎஃப்டி) ஃபேஷன் டிசைனிங்கில் பட்டம் பெற்றார்.
ஷோபிதா 2015 ஆம் ஆண்டு வெளியான ரங்கி தரங்கா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இது அவரது திரை வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. U-டர்ன், K.G.F: அத்தியாயம் 1, மற்றும் K.G.F: அத்தியாயம் 2 உட்பட பல வெற்றிகரமான கன்னட படங்களில் ஷோபிதா நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஷோபிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More : அதிர்ச்சி!. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!. உணவு, நீரின்றி குவைத்தில் தவிக்கும் இந்திய பயணிகள்!.