அனந்த நாடார் என்பவரது மகளான பத்மா கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பள்ளவிளை கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஆண்டனி பெனிஸ்டர் என்கிற பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினர் இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. இத்தகைய நிலையில், விவாகரத்து வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்த நிலையில், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
அப்போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்மா மர்மமான முறையில் உயிரிழந்தார். மகளின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக கூறி புகாரளிக்க பத்மாவின் தந்தை அனந்த நாடார் வடசேரி காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது பத்மாவின் கணவர் ஆண்டனி பெனிஸ்டர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறி தானே முன்வந்து வடசேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். எனது மனைவி பத்மா வீட்டில் யாரும் இல்லாதா போது தொடர்ந்து யாருடனோ செல்போனில் பேசி வந்தார். அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரிடம் விசாரித்த போது, நமக்கு தான் விவாகரத்து ஆகப் போகிறதே, நான் யாருடன் பேசினால் உனக்கு என்ன என்று என்னிடம் கேட்டார். இது எனக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அதனால் அவரது கழுத்தை நெரித்தேன். பின்பு அவர் மயங்கியதால் அங்கிருந்து வெளியில் சென்று சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது எனது மனைவி உயிரிழந்த தகவல் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நான் காவல் நிலையத்தில் சரணடைந்தேன் என்று அவர் கூறியுள்ளார். ஆண்டனி பெனிஸ்டர் சொன்ன பதிலை கேட்ட பத்மாவின் தந்தை மற்றும் காவல்துறையினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.