கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் இருக்கின்ற பங்கார்பேட்டையில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி 20 வயதாகும் இவரது மகன் கீர்த்தியும், வேறு சமூகத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கங்காதர் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதன் பிறகு கீர்த்தி தன்னுடைய தந்தையிடம் அவருடைய காதல் விவகாரம் பற்றி கூறியிருக்கிறார்.
ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ கங்காதர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டி திருமணத்திற்கு மறுத்து வந்துள்ளார். ஆனாலும் கீர்த்தி தொடர்ச்சியாக தந்தையிடம் இது பற்றி விவாதம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கம்போல கடந்த செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற வாக்குவாதத்தின் போது கிருஷ்ணமூர்த்தி கங்காதருடன் இருக்கும் காதலை முறித்துக் கொள்ளுமாறு மகளை வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் கீர்த்தி அதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவரை எதிர்த்துப் பேசியதால் கிருஷ்ணமூர்த்திக்கும் கீர்த்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரம் கொண்ட கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய மகள் கீர்த்தியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
அதன் பிறகு இந்த கொலையை மூடி மறைக்கும் விதமாக, தன்னுடைய மகளை மின்விசிறியில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டது போல ஜோடித்திருக்கிறார். கீர்த்தி உயிரிழந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலமாக காவல்துறையினருக்கு கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கீர்த்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ, என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணமூர்த்தி உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
கட்டட மேஸ்திரியாக வேலை பார்க்கும் கீர்த்தியின் காதலர் கங்காதர் தன்னுடைய காதலியின் மரணம் தொடர்பாக அறிந்து மனமுடைந்து போனார். அந்தத் துக்கத்தை தாங்க முடியாத அவர் அருகில் இருந்த ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. என்று தங்கவயல் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் கே தரணிதேவி தெரிவித்திருக்கிறார்.