திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதற்கட்டமாக இன்று (பிப்.27) சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதை கூற வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வந்தனர். அப்போது சீமான் வீட்டில் இல்லாததால் வீட்டின் முன்பு, சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர்.
ஆனால், சீமானின் மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பெயரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி அந்த சம்மனை கிழித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சம்மனை கிழித்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரை தள்ளிவிட்ட சீமானின் காவலாளி அமல்ராஜ் என்பவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சீமான் தர்மபுரியில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், “காவல்துறையின் விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. நான் ஓசூரில் இருப்பது தெரிந்தே காவல்துறையினர் வீட்டில் சம்மனை ஒட்டச் சென்றது ஏன்? என் வீட்டு கதவா விசாரணைக்கு வரப்போகிறது? காவல்துறையினர் ஒட்டிய சம்மன் நான் படிக்கவா?. இல்லை நாட்டு மக்கள் படிக்கவா?. காவல் துறை ஒட்டிய சம்மனைக் கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். அதற்காகச் சம்மனைக் கிழித்தவரைக் கைது செய்வீர்களா?. சம்மனைக் கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்?
சம்மனைக் கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?. என் கூட மோதி ஜெயிக்க முடிய வில்லை. என்னை பார்த்து நீ நடுங்கிட்ட, சமாளிக்க முடியல. என்ன செய்யனு தெரியாமல், அப்பப்போ ஒரு பெண்ணை கொண்டுவந்து முன்னாடி நிறுத்துகிறீர்கள்” என ஆக்ரோஷமாக பேசினார். கல்லூரியில் படித்து கொண்டிருந்த பெண்ணை விருப்பம் இல்லாமல் நான் கடத்தி கொண்டு கற்பழித்த மாதிரி இவ்ளோ பெரிய நாடகமாடுறீங்க.. என்னை எதிர்த்து நிக்க தைரியம் இல்லை..” என பேசினார்.
தொடர்ந்து, தைரியம் இருந்தால் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் ஒரு ரூபாய் கூட ஓட்டுக்கு லட்சம் கொடுக்காமல் 234 தொகுதிகளிலும் நேருக்கு நேர் நிக்க சொல்லுங்க.. திராவிடரா.. தமிழரா..? கருணாநதி மகனா.. பிரபாகரன் மகனா..? மோதி பார்க்கலாம். நான் எதுக்கும் அஞ்சுற ஆளு இல்ல.. என ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்து, எனது வழக்கில் தீவிரம் காட்டும் போலீசார் எந்த வழக்கில் உண்மையை கண்டுபிடித்துள்ளார்கள்.. ஆம்ஸ்ராங் வழக்கில் 3 பேரை சுட்டுப்பிடித்தார்கள். ஏன் என்பதற்கு விளக்கம் இருக்கா..? ஏன் கொலை செய்தார்கள்.. யார் சொல்லி செய்தார்கள் என்ற வாக்குமூலம் மட்டும் ஏன் வெளியே வரவில்லை.. அண்ணா பல்கலைகழக வழக்கில் ஞானசேகரன் என்ற ஒரே ஆள் தான் பாலியல் குற்ற சம்பவதில் ஈடுபட்டானா..? யார் அந்த சார்..? என்று கண்டு பிடிச்சீங்களா..? இந்த அதிகாரம் நிலையானது அல்ல.. கால சக்கரம் சுழன்று கொண்டு தான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என பேசினார்.
Read more:கல்லூரி படிக்கும் பெண்ணை விருப்பம் இல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்தேனா..? – சீமான் சர்ச்சை பேச்சு