கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் இறந்ததையடுத்து, கேரள சுகாதாரத் துறை மாவட்டத்தில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளது. கோழிக்கோடு பகுதியில் மட்டும் ஏன் அடிக்கடி இந்த வைரஸ் பாதிப்பானது பரவி வருகிறது என்ற கேள்வி தற்பொழுது என தொடங்கியுள்ளது.
கேரளாவில் பழம் திண்ணி வௌவால்கள் பல இடங்களில் இருக்கிறது, அவற்றில் நிபா வைரஸ் இருந்தாலும், ஏன் கோழிக்கோடு பகுதியில் மட்டும் திரும்பத் திரும்ப நிபா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்கான விடையை இதுவரை யாரும் கண்டறியவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் மிகச் சிறந்த வைராலஜி துறை நிபுணருமான மருத்துவர் ஜேக்கப் ஜான் கேள்வி எழுப்பி உள்ளார்.
கேரளாவில் 2018 ஆம் ஆண்டு முதல் நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. கோழிக்கோட்டில் உள்ள பெரம்பராவில் நிபாவால் 2018-ல் பதினேழு பேர் இறந்தனர். பின்னர் 2021 ஆம் ஆண்டு அதே கோழிக்கோட்டில் நிபா வைரஸ் மீண்டும் பரவியது. அந்தச் சமயத்தில் சிறுவன் ஒருவன் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். தற்போது அதே மாவட்டத்தில் மீண்டும் நிபா காய்ச்சல் பரவியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் மரணம் ஆகஸ்ட் 30 தேதி பதிவானது. நேற்று முன்தினம் இரண்டாவதாக ஒரு நபர் வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 12 நாட்களுக்கு பிறகு மேலும் ஒருவர் உயிரிழந்தது மத்திய மாநில அரசின் தோல்வியை காட்டுவதாக மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை காட்டில் வாழும் வௌவால்களின் வாழ்விட சூழலுக்கு எற்படுத்தும் பாதிப்பால் வௌவால்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வர நேர்வதால் நிபா வைரஸ் பரவுகிறதா.? என்பதை ஆராய வேண்டும். 2018ல் கேரளாவில் நிபா பரவலைத் தொடர்ந்து திருவனந்தபுரத்திலும், பிற இடங்களிலும் Institute of Advanced Virology நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என இருந்தும், இன்னமும் அந்த பணி நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரவில்லை.
குறிப்பாக நிபா வைரஸ் உள்ள 8 மாநிலங்களிலாவது அந்த நிறுவனம் விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல கேரளாவில் AIIMS மருத்துவமனை தொடங்க வேண்டும் என்றார். மேலும் இந்த நிபா வைரஸ் பன்றிகளை பராமரிப்பவர்கள் மத்தியில் எளிதில் பரவும் வாய்ப்பு உண்டு. நிபா பாதிப்பை தடுக்க மருந்துகளோ, தடுப்பூசியோ இல்லை. மேலும் மோனோகுளோனல் ஆண்டிபாடி மருந்து நிச்சயம் உதவும் என்று சொல்ல தெளிவான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றார்.