கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழன் அன்று கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் குறித்த பரிந்துரைகளையும் குழு சமர்ப்பிக்கும்.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிபாத் நகராட்சியில் உள்ள வழுதானம் வார்டில் நோய் பரவுவதை தடுக்க 20,000 பறவைகளை அழிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இறந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பின்னர் கேரளாவில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோயின் மையப்பகுதியிலிருந்து ஒரு கிமீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து பறவைகளும் இன்று முதல் அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.