பணியிலிருக்கும் போது விபத்து ஏற்பட்டால் அதற்கு நஷ்டஈடு வழங்குவது நிறுவனத்தின் பொறுப்பு. பெரும்பாலும் எல்லா நாடுகளிலுமே இதற்கான சட்டம் இருக்கிறது. அப்படி ஒரு செஃப், ரெஸ்டாரன்ட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தால், நிறுவனத்திடம் 2.2 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 22 கோடி) கிளைம் செய்திருந்தார். ஃபெரேன்க் சுமேகி என்ற ஊழியர் ஒருவர், ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாற்றி வந்திருந்தார். அவர் அங்கு வேலை செய்த போது, ட்ரேக்களை எடுக்கும்போது, முதுகில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும், இதனால் தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், அதனால் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், கிரட்சுகள் இல்லாமல் நடக்க முடியவில்லை என்பதையும் காரணம் காட்டி, நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
இதில் பிரச்சனை என்னவென்றால், இவர் வசிப்பது ஒரு நாடு. ஆனால், கிளைம் கோரியிருப்பதோ மற்றொரு நாட்டிலிருந்து. இங்கிலாந்தில் உள்ள வொர்க் மற்றும் பென்ஷன் டிபார்ட்மென்ட், இந்த கிளைமை பிராசஸ் செய்யும் போது, இவர் எங்கு வசிக்கிறார் என்பது பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த, தன்னுடைய வீட்டின் முகப்பில் நின்றபடி ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கோரியுள்ளது. அந்த செஃப்பும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தில், பென்ஷன் துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கு தீர்வு கிடைத்தது. நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்த ஊழியர், தன்னுடைய புகைப்படத்தை ஃபோட்டோஷாப் செய்திருக்கிறார். மேலும், அவரது வீட்டின் புகைப்படம் கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் பதிவாகி உள்ளது. அதில் தனது புகைப்படத்தை சேர்த்து, போலியாக ஆவணத்தை அனுப்பியுள்ளார். போட்டோ எடிட் செய்தவர் அதை சரியாக செய்திருக்கலாம். ஆனால், அந்த புகைப்படத்தில் கூகுள் நிறுவனத்தின் லோகோ இருப்பதை மறந்து விட்டு அப்படியே அனுப்பியிருக்கிறார்.
இந்த ஊழியருக்கு 49 வயதாகிறது. இந்த வழக்கை நடத்திய இங்கிலாந்து அடிப்படையிலான வழக்கறிஞர்கள், இவருக்கு ஏற்பட்ட காயம் உண்மை தான். ஆனால் இவர் அனுப்பிய புகைப்படம் போலி என்று கூறியுள்ளனர். மேலும், தனது குடும்பத்துடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்றையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு மாட்டியுள்ளார். இவர் கூறியது பொய் என்பதை அறிந்த நீதிமன்றம், அவருக்கு £75,000 அபராதம் விதித்துள்ளது.